வணக்கம்! பெண்கள் இயற்கையிலேயே சாதனையாளர்கள் தான். பெண்ணாகப் பிறத்தலே சாதனைதான் எனக் கூறினான் பாரதி. ஒரு பெண் பிரசவத்தின் போது மரணத்தோடு போராடி தன் குழந்தையை ஈன்றெடுக்கிறாள். ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்நாளில் பல்வேறு இன்னல்களைத் தாண்டி சமூகத்தில் தனக்கான மாற்றத்தினை நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கிறாள். குடும்ப அளவிலும் சரி சமூகத்தின் பார்வையிலும் சரி இன்றளவிலும் பெண்கள் தாழ்த்தப்பட்டவர்களாகவே உள்ளனர். தனிப்பட்ட துரோகம், ஆணாதிக்கம், போன்ற சமூகவிரோத செயல்களால் இன்றளவும் பெண்கள் சிதைக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றனர். “அவன் கூப்பிட்டா நீ ஏன்டி போன?” என்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாதாடும் இந்த சமூகம் “அவன் ஆம்பள அப்பிடித்தான் இருப்பான்” என்று கூறுவதில் வியப்பில்லை. தந்தையாக, சகோதரனாக, காதலனாக, கணவனாக ஒவ்வொரு ஆணும் ஏதோ ஒரு விதத்தில் பெண்களை அடிமைப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆயிரம் தடைகள் இருப்பினும் அனைத்தையும் களைந்தெறிந்து தனக்கான பாதைக்கு அடித்தளமிட்டு வரலாற்றை தன்வசமாக்கிய பெண்களும் இங்கு ஏராளம். அத்தகைய சில பெண் சாதனையாளர்களைப் பற்றியதே இப்படைப்பு. இவர்கள் அனைவருமே தன் அனைத்து நிராகரிப்புகளையும் கடந்து தன்னம்பிக்கையுடன் போராடி வாழ்வில் வெற்றி பெற்றவர்கள். முயற்சியை முகாந்திரமாகக் கொண்டு தன் இலச்சியத்தை நோக்கி உழைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்ணிற்க்கும் இப்படைப்பு ஒரு ஊக்க மருந்தாகும்.