அப்பத்தாவும் பேத்தியும்

ilaval2010
பெண்மையக் கதைகள்
4.8 out of 5 (16 )

அப்பத்தாவும் பேத்தியும்

"ஏன்டி..... ரெண்டு நாளா எதையோ பறிகொடுத்த மாதிரி
இருக்கே.... என்ன ஆச்சு..... ஸ்கூல்லே யாராவது திட்டிட்டாங்களா.... இல்லே டீச்சருக யாராவது அடிச்சிட்டாங்களா....... "

" ப்ச்.... அப்படி எல்லாம் ஒன்னுமில்லேம்மா...... "

"அப்ப..... ஏன் உம்முன்னு இருக்கே..... எப்பவும் கலகலப்பா பேசுவே..... இப்ப வாயத் திறக்கவே மாட்டேங்கறே..... "

பதில் சொல்லாது நின்ற மகள்
சாத்விகாவைப் பார்த்தாள் திவ்யா.

பள்ளியில் ஏழாம் வகுப்பில் காலடி எடுத்து வைத்திருந்தாள். எப்போது வேண்டுமானாலும் பூப்பெய்தும் நிலையில் உடல் வளர்த்து.

திவ்யாவிற்குக் கவலை. இரண்டுங் கெட்டான் வயசு. ஏடாகூடமாக ஏதாவது நடந்திருந்திருக்குமோ.....

நினைக்கவே திவ்யாவிற்கு உடல் நடுங்கியது.

மகளின் அருகில் சென்று வாஞ்சையுடன் சாத்விகாவின் தலையை மென்மையாக வருடினாள்.

சாத்விகா தலை நிமிர்ந்து தன் தாயைப் பார்த்தாள்.

"எதுவா இருந்தாலும் சொல்லுடா..... அம்மா இருக்கேன். அப்பா கிட்டேயும் பேசு..... அப்பா வரட்டும். நானே என்னன்னு கேட்க வைக்கிறேன்டா.... "

திவ்யாவிற்குத் தலையாட்டியபடி,

"இல்லேம்மா..... அப்பா வரட்டும்மா....... " என்றபடி சாத்விகா தன் படிப்பறைக்குள் சென்றாள்.

திவ்யாவிற்கு வயிற்றைப் பிசைவது போன்ற உணர்வு. இந்த வயதில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும்.
எப்போதும் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா.... அப்படியும் இப்படியும் அவளிடம் தினமும் பேசிக்கொண்டு தான் இருந்தாள்.

நன்றாகத் தானே இருந்தாள். இந்த இரண்டு நாட்களாகத் தானே..... ஆ.... நினைவு வருகிறது.... இரண்டு நாள் முந்தி பள்ளியில் இருந்து ஏதோ புராஜக்ட் ஒர்க்னு எங்கெயோ அழைச்சிட்டுப் போறாங்கன்னு சொன்னாளே... நான் ஒரு மடச்சி.... எங்கே என்ன விவரம்னு கேட்காம இருந்திட்டேன்.

மெதுவாக திவ்யா படிப்பறை பக்கம் எட்டிப் பார்த்தாள். அறை சாத்தப் பட்டிருந்தது.

இப்பப் போயி மறுபடியும் கேட்டா..... எதுவும் சொல்ல மாட்டா..... இவரு வரட்டும்... என்னன்னு விசாரிக்கச் சொல்லலாம்..... இப்பத் தான் எல்லாப் பிள்ளையும் கையிலே ஃபோன் வச்சிக்கிட்டு சதா அதையே நோண்டிக்கிட்டு இருப்பாங்களே..... கேட்டா ஆன்லைன் க்ளாஸ்னு சொல்லி வாயடைச்சிற்றாங்க.
அதிலே தான் என்னென்ன கண்றாவியெல்லாம் வருதே.... அப்படி ஏதாவது பார்த்து..... தவறா எங்கேயாவது மாட்டிக்கிட்டாளோ..... ஐயோ... என் கற்பனை ஏன் இப்படி எல்லாம் போகுது..... சாத்விகா நல்ல பொண்ணு.... அப்படி எல்லாம் இருக்காது....

திவ்யா தன்னைத் தானே தேற்றிக் கொண்டாள்.

இந்த சம்பத் இன்னைக்குன்னு ஏன் தான் இவ்வளவு லேட்டோ... ஆபீஸ் முடிஞ்சாலும் இவருக்கு மட்டும் முடியாது. எல்லோரோட வேலையும் இழுத்துப் போட்டுக்கிட்டு செய்றது. கேட்டா பரோபகாரம் அது இதுன்னு பேசுறது. வரட்டும். இனிமே ஆபீஸ் முடிஞ்சதும் நேரா வரச் சொல்லனும்....

திவ்யா நினைத்துக் கொண்டிருக்கும் போதே சம்பத் உள்ளே வந்தான்.

வந்ததும் வராததும் எதுவும் சொல்ல வேண்டாம். கைகால் முகம் கழுவி ஆற அமர உட்காரட்டும். அப்றம் பேசுவோம்.

திவ்யா முடிவெடுத்தபடி சாத்விகா இருந்த அறை நோக்கிக் குரல் கொடுத்தாள்.

சாத்வி.... அப்பா வந்துட்டாங்க.
வா.... வெளியே வா.... அப்பாகிட்டெப் பேசு....

சம்பத் கைகால் முகம் கழுவிக் கொண்டு அலுவலகக் களைப்பு நீங்க அமரவும் திவ்யா சூடாகக் காப்பி கலந்து கொண்டு நீட்டவும் சரியாக இருந்தது.

"காப்பியோட ஃபில்டர் மணமே மூக்கைத் துளைக்குதே.... பேஷ்"

என்று சிரித்தபடி காப்பி டபராவை வாங்கினான் சம்பத்.

"இதென்ன புதுசா அப்பாகிட்டே பேசு அப்படி இப்படின்னு சாத்விகாவைக் கூப்பிட்றே.... என்னா ப்ராகிரஸ் ரிப்போர்ட்லே கையெழுத்துப் போடணுமா.... மார்க் எதிலேயாவது குறைச்சி வாங்கிட்டாளா..... சாத்விகா... வா... வா... "

சாத்விகா சம்பத்தை ஒட்டியபடி உட்கார்ந்தாள்.

"சாத்விகா கண்ணுக்கு என்ன வேணும்... சொல்லுங்க செல்லம்...... "

உம்மென்றிருந்த சாத்விகாவின் மோவாயை நிமிர்த்தியபடி சம்பத் கேட்டான்.

"சொல்லுடி..... அப்பா வந்த உடனே சொல்றேன்னு சொன்னியே..... இப்பச் சொல்லுடி..... ரெண்டு நாளா மூஞ்சியத் தூக்கி வச்சிக்கிட்டு உம்முன்னு பேசாம இருக்கியே
என்னன்னு கேட்டதுக்கு அப்பா வந்ததும் சொல்றேன்னு சொன்னா.... இப்பக் கேளுங்க என்னன்னு...... "

சம்பத் வாயைத் திறப்பதற்கு முன் சாத்விகா பேசலானாள்.

திவ்யா முகம் பார்த்துக் கேட்டாள்.

"அம்மா..... நான் பிறக்கறதுக்கு முன்னாடி உன் வயத்திலே தானேம்மா இருந்தேன். அப்ப எத்தனை முறை நான் உதைச்சிருப்பேன். உனக்கு எப்படி எல்லாம் வலிச்சிருக்கும். அப்ப எனக்காக எவ்வளவு பத்தியம் இருந்திருப்பே... நான் பிறந்த பிற்பாடு எனக்கு நல்லதுன்னு நீ உனக்குப் பிடிச்சதை எல்லாம் சாப்பிடாம இருந்திருப்பே.... இல்லியாம்மா..... "

"அதெல்லாம் ஒரு தாய்க்குச் சந்தோஷத்தைக் கொடுக்கறதுடா.... ஒரு பெண்ணுக்குத் தாய்மைங்கறது பெரிய வரம்டா..... "

"ஆமாம்மா.... வரம் தான். ஆனாலும் உன்னைத் தூங்க விடாம நான் ராத்திரி பூரா அழுதப்ப நீ எனக்காக முழிச்சிக்கிட்ருந்தே.... பக்கத்திலே என்னைப் படுக்கவச்சி தட்டிக்கொடுத்துக்கிட்டே இருப்பே...... நானும் அப்பப்ப உன் புடவையிலே ஆயி போய் ஈரம் பண்ணி விட்ருப்பேன். இதுக்கெல்லாம் முகம் சுழிக்காம துணி மாத்தி விட்ருப்பே....... அது உனக்கு எவ்வளவு சிரமத்தைக் கொடுத்திருக்கும்..... "

"சிரமமா..... அது ஒரு தாயோட கடமைடா... சொந்த ரத்தம் இல்லையா...... பாசம்டா.... "

"ஆமாம்மா..... சொந்த ரத்தம் தான். அப்ப ஏன்மா..... மாமா பாட்டியை முதியோர் இல்லத்திலே சேர்த்திருக்காரு..... "

இப்போது திவ்யாவும் சம்பத்தும் திகைத்தனர். சம்பத் முகம் கறுத்தான்.

"என்னது மாமாவா.... பாட்டியையா..... எனக்கு ஒன்னும் தெரியாதே.... இரு மாமாவ விசாரிக்கிறேன். "

திவ்யா சொல்ல, சம்பத் கேட்டான்.

"ஆமா...... இது எப்படி உனக்குத் தெரியும்.... சாத்விகா..... "

"ரெண்டு நாள் முன்னாடி ப்ராஜக்ட்னு ஸ்கூல்லேர்ந்து கூட்டிட்டுப் போனாங்கன்னு... சொன்னேனே..... பிருந்தாவனம் முதியோர் இல்லத்திலே தான் பாட்டியைப் பார்த்தேன்..... மாமா ஏன்பா...
இப்படிப் பண்ணினாரு.... "

சம்பத் பதில் சொல்லத் திகைத்தான்.

திவ்யா பதில் சொன்னாள்.

"மாமாவா அப்படிச் செஞ்சாரு... இருக்காதுடா..... நானும் மாமாகிட்டேயும் அம்மா கிட்டேயும் பேசி ரொம்ப மாதங்களாச்சே..... ஏதோ ஒரு விசேஷத்திலே உங்கப்பாவ மாமா ஒரு மாதிரியாப் பேசிட்டாரேன்னு அதிலேர்ந்து அம்மா வீட்டுக்கும் போறதில்லே.... யாரோடயும் பேசறதில்லே.... அதான் இந்த விஷயம் தெரியாமப் போயிருக்கு....... "

"பாட்டி எவ்வளவு நொந்து போயிப் பேசினாங்க... தெரியுமா..... சாத்வி கண்ணு... என்னைய உங்க வீட்டுக்குக் கூட்டிட்டு போயிட்றான்னு புலம்புனாங்க..... என்னடி முதியோர் இல்லத்திலே போயி உங்க பாட்டியச் சேர்த்திருக்காங்கன்னு என் ஃப்ரண்ட்ஸெல்லாம் கேட்டப்ப எனக்கு எவ்வளவு அவமானமாப் போச்சி தெரியுமா..... நாம உடனே போயி பாட்டியக் கூட்டிட்டு வருவோம்மா...... "

சாத்விகா சொல்ல திவ்யா கண்களில் நீர் துளிக்க சம்பத்தை அவசரப்படுத்தினாள்.

"ஏங்க.... உடனே கிளம்புங்க.... அம்மாவக் கூட்டிட்டு வரலாம்... "

"அம்மா மேலே அவ்வளவு பாசமாம்மா.... "

"இருக்காதா சாத்வி.... இப்ப என் மேலே உனக்குப் பாசம் இருக்கிற மாதிரி தானே.... "

சம்பத்தும் திவ்யாவும் சாத்விகாவுடன் புறப்பட்டனர்.

அது நந்தவனம் முதியோர் இல்லம்.

"ஏன்டி... பிருந்தாவனம்னு சொன்னே.... இங்கே நந்தவனம்னு வந்திருக்கோம். "

"இது அதோட கிளை தாம்மா... வாம்மா உள்ளே போகலாம்.... "

சம்பத் தயங்கியபடி திவ்யாவுடன் உள்ளே நுழைந்தான்.

அங்கே திவ்யாவின் அம்மா கமலா நின்றிருந்தார்.

"அம்மா..... நீ எதுக்கும்மா இங்கே வந்தே.... நேரே நம்ம வீட்டுக்கு வர வேண்டியது தானே.... எங்கே என் அண்ணன்.... நாக்கப் பிடுங்கிக்கற மாதிரி நாலு வார்த்தை கேட்கறேன்.... "

கமலா புன்னகைத்தார்.

" அம்மா மேல அக்கறை ....இல்லே... ... உனக்கு மட்டும் தான் பாசம் இருக்கணும் இல்லையா.... "

"என்னம்மா பேசறே..... "

சாத்விகா திவ்யாவிடம்,

"நான் சொல்றேன்.... நீ உள்ளே
வாம்மா.... உனக்கு க் காட்றேன். அப்பா.... நீங்களும் வாங்க... "
என அழைத்தாள்.

சம்பத்தும் திவ்யாவும் உள்ளே நுழைய, அங்கே சம்பத்தின் தாயார் லெட்சுமியம்மா நின்றிருந்தார்.

"அத்... தே... நீங்க.... இங்கே.. "
எனத் திவ்யா திணறினாள்.

"அம்மா.... நான் ப்ராஜக்ட்னு இங்கே வந்தப்ப அப்பத்தாவத் தான் பார்த்தேன். நான் உன் கிட்டே அப்பத்தா எங்கேன்னு கேட்டப்பல்லாம்.... அவங்க காசிக்குப் போயி அங்கேயே இருந்துட்டாங்கன்னு பொய் சொல்லிட்டியேம்மா.... ஏன்மா...
உனக்கு மட்டும் உங்கம்மா மேலே பாசம்.... என் மேலே பாசம்... அதே மாதிரி அப்பாவுக்கும் அம்மா மேலே பாசம் இருக்குமே... அப்பத்தா வுக்கும் அப்பா மேலே பாசம் இருக்குமேம்மா.... நீ எதுக்கும்மா அவ்வளவு பிடிவாதம் பிடிச்சி அப்பத்தாவ முதியோர் இல்லத்திலே சேர்க்க வச்சே... அப்பா மனசு எவ்வளவு பாடுபட்ருக்கும். நான் அப்பத்தா வராம வீட்டுக்கு வர மாட்டேன். இங்கேயே இருந்துக்கறேன்.... "

"சாத்வி.... அப்படி எல்லாம் பேசாத.... அப்பத்தாவ இப்பவே வீட்டுக்கு அழைச்சிட்டுப் போயிருவோம்..... அத்தே என்னை மன்னிச்சிருங்க.... அம்மா நீயும் வந்திடும்மா... "

"நான் எதுக்கு.... என் மருமக நல்லாத்தான் வச்சிருக்கா... உங்க அண்ணனும் ஒரு குறையுமில்லாம வச்சிருக்கான். நீ திருந்தனுங்கறதுக்காக நான், உங்க அண்ணன், மாப்பிள்ளை
எல்லோருமாச் சேர்ந்து ஆடின நாடகம். இதிலே முக்கிய பாத்திரம் யாரு தெரியுமா... சாத்விகா தான். அவ தான் இங்கே அவங்க அப்பத்தாவப் பார்த்து விட்டு வருத்தப்பட்டா... என் கிட்டே பேசினா.... மாப்பிள்ளையும் ரொம்ப வருத்தப்பட்டாங்க உன் பிடிவாத குணத்தைச் சொல்லி... அப்றந் தான் இந்த நாடகம்.... பரவாயில்லே.... என் பேத்தி சமர்த்து தான்...... "

அதற்குள் சம்பத் இல்ல நிர்வாகியிடம் முறையாக அம்மாவை அழைத்துச் செல்ல அனுமதி பெற்று வந்தான்.
அவனது கண்களில் ஆனந்தக் கண்ணீர்.

ஒருபுறம் திவ்யா கைப்பிடிக்க மற்றொரு புறம் சாத்விகா பிடித்துக் கொண்டு வர லெட்சுமியம்மா சிரித்தபடி நடந்தார்.

இளவல் ஹரிஹரன்

താങ്കൾ ഇഷ്ടപ്പെടുന്ന കഥകൾ

X
Please Wait ...