"தம்பிரான் வணக்கம் 1578" என்ற இந்த புத்தகத்தை உங்களுக்குக் கொடுப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.
ஏற்கனவே சிலர் இந்த புத்தகத்தை மீள்பதிப்பு செய்து வெளியிட்டிருந்தாலும், தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சியைக் காட்டும் அரிய பொக்கிஷம் இது என்பதால், இதைத் தற்காலத் தமிழில் பகுத்து, பிரித்து கொடுப்பது, தமிழர்களுக்கும், ஆராய்ச்சியாள ர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் பயனளிக்கும் என்று கருதி மீண்டும் வெளியிடுகிறோம்.
இந்த புத்தகம் இரண்டுப் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது பகுதியை நான்கு பிரிவுகளாகப் பிரித்துள்ளோம். முதலாவது பிரிவில் தமிழ் மூல பிரதியின் நகலைக் கொடுத்துள்ளோம். இரண்டாவது பிரிவில், தற்காலத் தமிழ் எழுத்துக்களில் எளிதில் வாசிக்க கூடிய வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது பிரிவில் தற்காலத்தில் சரியான பொருளோடு புரிந்துக்கொள்ளும்படி பதம்பிரித்துக் கொடுத்துள் ளோம். நான்காவது பிரிவில் லத்தின், போர்த்துகீசியம், பழைய தமிழ் சொற்களுக்கு உண்டான பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒவ்வொரு பக்கமும் பகுத்து, பிரித்து முதல் பகுதியில் விளக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பகுத்து பிரித்து தந்தவர், பல்துறை ஆய்வறிஞர் என்று பலராலும் சிறப்பிக்கப்பட்ட திரு. பழங்காசு. ப. சீனிவாசன் ஐயா அவர்கள். நாத்திகரான இவர் எனக்கு நண்பராய் கிடைத்ததும், எமது வேண்டு கோளை ஏற்று துடிப்புடன் இந்தப் பணியை செவ்வனே செய்துமுடித்ததும் பாக்கியமாகக் கருதுகிறேன்.
இரண்டாவது பகுதியில், தற்காலத் தமிழில், பொருள்மாறாமல், எளிதில் புரிந்துக்கொள்ளும் வகையில் பழைய தமிழில் இருந்து மீண்டும் தற்காலத் தமிழுக்கு மாற்றியுள்ளேன், தேவையான இடங்களில் அடிக்குறிப்பும் கொடுத்துள்ளேன்.