முனிதகு பண்பின்னா...

காதல்
5 out of 5 (4 ரேட்டிங்க்ஸ்)
இந்தக் கதையைப் பகிர

முனிதகு பண்பு இன்னா…..

அன்பில் சிறந்து மகிழ்வில் திளைத்து மனநிறைவோடு இனிதே வாழும் தலைவியின் காதல் கணவன், எல்லை காக்கும் காவல் பணியாற்றக் கிளம்புகின்றான். பிரிந்தால் உயிர் வாழா அன்றில் பறவை போலும்... எனினும் தன் தலைவன் மேற்கொண்டுள்ள நாட்டு மக்களைக் காக்கும் பொறுப்பில் தவறுதல் கூடாது என்று தலைவி தானே மனமுவந்து அவனுக்குப் புன்னகையைப் பரிசளித்து, காதல் நிறை கண்களால் அவனை ஆரத்தழுவி, நெற்றியில் அவன் முகத்தில் பூத்திருக்கும் ரோமங்கள் பதிந்திடவே மெய் சிலிர்க்க முத்தம்தனைப் பெற்றுக் கொண்டவளாய் விடை கொடுக்கிறாள்.

தனிமையில் அவனது நினைவையே சுகமாக்கிக் கொண்டு சுவற்றில் நாட்கோடிட்டுக் கணவனின் வருகைக்காக வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கின்றாள். பிரிவின் தடை உடைத்து அவன் மீண்டதும் அவன் அடைந்த தனிமைக் கொடுமையின் மீட்சியை, அள்ளித் தெரிக்கும் அவன் கண்களின் ஒலியும், தன்னைக் கண்டதும் மாறும் முகமலர்ச்சியும், அன்பினிய சொற்களும், அணைப்பின் இறுக்கமும் சித்திரமாய்க் காட்டிவிடும்.

பிரிவுத் துயரிலும் இந்நினைவு எழும்பொழுதெல்லாம் வெட்கம் திண்ண அவள் முகம் சிவந்து தனக்குள்ளேயே மெல்ல நகைத்துக் கொள்கிறாள்.

என்றும் தனித்திருந்து வரவேற்பவள் இன்று தன்னுள் அவனது கருவைச் சுமந்தவளாய், முகத்தில் கரம் தடவ அவன் இருவிழி பார்த்து இந்நற்செய்தியைக் கூறிட ஏங்கிக் காத்திருக்கின்றாள். காலத்தின் நீட்டிப்பினால் தாங்கொணாத்துயரம் மேலிடச் சோர்வடைகின்றாள். கருவுற்றிருப்பதைத் தான் அறிந்த மறுவினாடியே கணவனிடம் கூறி அவனது உணர்ச்சிகளை அணுஅணுவாய் ரசித்திட அவா கொள்ளும் பெண்மைக்கான ஏக்கம் அவள் மனதிலும் நிறைகின்றது.

கணவனாக உடன் இருந்து இல்லறக் கடமைகளை மட்டுமே கவனித்துக் கொண்டு தன் மனைவி, தன் மக்கள் என்று, என்றும் பிரியாமல் வாழ்கின்ற மற்ற ஆடவர்களைப் போல இல்லாமல்…..

வாக்கியத்தை முடிக்க நினைப்பதற்குள் அடுத்த வாக்கியம் முந்திக் கொண்டது….

நாட்டு மக்களைக் காக்கின்ற காவல் பணியை ஏன் தேர்ந்தெடுத்தான்?... இப்பணி செய்கின்றவனை ஏன் கணவனாக நான் தேர்ந்தெடுத்தேன்?...

இரவு, பகல் பாராமல்; நல்ல நாள், கெட்ட நாள் இல்லாமல்; பெருவெள்ளம், நோய் தொற்று என நினையாமல்; எப்போதும் கடமையாற்றும் நாட்டினைக் காக்கும் பணியில் அவன் சேராமல் இருந்திருந்தால்…..

வாழ்நாள் முழுதும் எப்பொழுது இல்லம் வருவான்?? எனத் தெரியாமல் வழி பார்த்திருத்தல் தான் என் நிலையா?

இப்படி விடை கிடைத்திடாத வினாக்கள் முடிவில்லாமல் எழுந்தவண்ணம் இருந்தது.

நான் உண்மையாகவே மகிழ்வான வாழ்க்கைதான் வாழ்கின்றேனா?.

என்றும் பிரிவதில்லை என்று கணவன் கூறியவை, ஆசை வார்த்தைகளாய் என்னை நிதம் ஏமாற்றுகின்றனவா?.

மனதில் எண்ணங்களின் அலை அடிக்க; துக்கம் அவளது தொண்டைக் குழியினை அடைத்தது;

ஞாயிற்றின் கதிர் தாளாமல் தன் கூட்டுக்குள் சுருண்ட நத்தை போன்று உடல் முழுதும் இளம் சூடு பரவ வெறுந்தரையில் சுருண்டு கிடந்தாள்.

அவளது கண்கள் சிவக்கின்றன. முதல் முறையாய்க் கருவுற்றிருக்கிறாள்…. வாழ்வில் திரும்பப் பெற்றிட இயலாத தருணம். அறிந்த மறு வினாடியே கணவனிடம் கூறி மகிழ்ந்திட இயலாமை, அவனது அருகின்மை, மனதில் வெறுமை தொற்றிக் கொள்கிறது. நற்செய்தியை அறிந்ததும் அவன் கொள்ளவிருக்கும் மகிழ்வின் பிம்பங்கள் கண்முன் தோன்றினாலும் ஊடலின் மிகை அவள் மனதை வருத்திடக் கணவன் மேல் வெறுப்பு கொள்கிறாள். கோபக்கனல் அவள் உடலைச் சுட்டெரிக்க அன்பின் ஆவல் கண்ணீராய் கன்னம் நனைக்கத் தூக்கம் கலைந்தே திடுக்கிட்டு எழுந்தாள் தலைவி.

இதென்ன இப்படியொரு தீக்கனவு…

தலைவனை வெறுத்தலும், அவன் எனக்குக் கொடுமை செய்தான் என எண்ணிக் கண்ணீர் விடுதலும் எனக்கு முறையோ…?

இங்ஙனம் என் தலைவனோடு நான் வேறுபட்டால், ஊரின் பொது இடத்தில் உள்ள அச்சம் தரும் முதிர்ந்த கடவுள் அவர் எனக்குக் கொடுமை செய்தார் என நினைத்து அவருக்கு வருத்தம் தந்துவிடுமே என எண்ணி உடல் வியர்த்துப் போனாள்.

தன் காந்தள் விரல்களால் அவளது மென்மையான வயிற்றினைத் தடவிக் கொண்டே சிசுவிடம் பேசலானாள்.

என் கண்ணே…!

உனக்கு என் குரல் கேட்கிறதா…?

இதோ இன்னும் சில தினங்களில் உன் தந்தையின் குரலையும் அவரது அன்பு முத்தங்களையும் பரிசாகப் பெறுவாய்.

நீ இம்மண்ணில் பிறக்கும் குழந்தைகளுள் மிகவும் கொடுத்து வைத்த குழந்தை.

ஆம்…உன் தந்தை மிகச்சிறந்த பண்பாளர். அன்பின் உறைவிடம். நம்மையும் நாட்டு மக்களையும் இருவிழியாகக் கொண்டு காப்பவர்.

பொறுப்புள்ள நாட்டின் குடிமகனைக் காதல் கணவனாகக் கரம் பற்றிய பேறு பெற்றவள் நான்.

இதோ இந்த வினாடி கூட மனம் முழுதும் என் நினைவினைச் சுமந்து கொண்டு எனைப் பார்க்க ஏங்கும் கண்களோடு, ஏற்ற பணியினைச் சிறப்பாய் செய்திடவே தனக்குத் தானே ஆணையிட்டுக் கொண்டு சமூகப்பணியாற்றிக் கொண்டிருப்பார்.

விரைவில் உன் தந்தை உனை அறிந்து மகிழ்ந்திட வந்துவிடுவார்.

என் நினைவோடு இனி உன் வரவிற்கான தருணத்தையும் நினைந்து இரட்டிப்பு ஊக்கத்துடன் தன் கடமையாற்றிடுவார்.

நிகழ்தருணங்களின் உணர்வுகளில் மகிழ்வைத் தேடும் சாதாரண குடும்பத்தினர் அல்ல நாம். இல்லறப் பொறுப்போடு சமூகப்பொறுப்பினையும் நிறைவேற்றுதலால் வாழ்வின் நிறைவினை உணரும் தன்மையுடையவரைத் துணையாகப் பெற்றவர்கள்.

நாம் எப்பொழுதும் மகிழ்வாக நிறைந்த மனதுடன் கவலைகளும் சோர்வும் இல்லாமல் இருப்பதையே அவர் விரும்புவார் என்று பலவாறாக உள்ளப்பூரிப்போடு தன் கணவனைப் பற்றி அறிமுகம் செய்யும் விதமாக சிசுவிற்கு ஆறுதல் கூறுவதாய்த் தன்னைத் தானே தலைவி ஆற்றுப்படுத்திக் கொண்டே தெய்வத்திற்கும் தன் நிலையை உணர்த்தலானாள். அந்த வேளையில் தோழி அங்கு வந்தாள்.

தலைவி கருவுற்றிருப்பதைத் தோழி அறியாள்.

தலைவனைப் பிரிந்த துயரால் கவலையுற்று தனிமையில் பேசிக் கொண்டிருக்கின்றாள் என நினைத்து அருகில் அமர்ந்து ஆறுதல் மொழிகள் கூறத் தொடங்கிய தோழி…..

தலைவி… தாங்கள் தலைவனைப் பிரிந்த துயரால் பெரிதும் சோர்வுற்றுள்ளீர் என்றாள்.

தலைவன் தனக்குக் கொடுமை செய்பவன் இல்லை என்பதைத் தெய்வத்திடம் மேலும் உறுதிப்படுத்த விரும்பியவளாய்த் தலைவி தோழியிடம்….

இல்லை..இல்லை தோழி..

சற்றே நீ என்னை நன்கு கவனித்துப்பார்….

என் நெற்றி பசலை அடைந்துள்ளதா..?

மெல்லிய என் தோள்கள் மெலிந்துள்ளனவா..?

தோழி, ஆம் என்று பதில் கூறி முடிப்பதற்குள் தான் கூற நினைத்ததைச் சொல்லத் தொடங்கிவிட்டாள் தலைவி.

காணும் காட்சிகள் அனைத்திலும் அவனது புன்னகைத்த முகத்தினை அல்லாமல் வேறு ஒன்றும் கண்டிலேன்.

செவி மடலோ… அவனது ஓசையாகவே எனக்குள் ஒலிகளைப் பிரதிபலிக்கின்றன.

உதடுகளோ மனதின் எண்ணத்தை உச்சரிப்பதாய் அவனை அழைத்தவண்ணமே முனுமுனுக்கின்றன.

அவனது மணம் காற்றில் கரைந்து என்னைச் சுற்றிலும் சூழ்ந்துள்ளதை உணருகின்றேன்.

அவனது இதமான மூச்சுக் காற்று படுதலால் அடிக்கடி என் மேனியில் மயிர்க்கால்கள் சிலிர்த்துக் கொள்கின்றன.

ஆம், வேரொன்றிலும் நினைவு செல்லாது என்றும் என் ஐம்புலங்களையும் தன் வசமே வைத்துக் கொள்ளும் அளவிற்கு அளவற்ற அன்பால் என் கணவன் என்னைத் தன்னுள் வைத்துக் காக்கின்றான்.

அவரது அன்பான முத்தத்தைப் பெற விரும்பியதால் தான் என் நெற்றியில் பசலை படர்ந்தது.

உடன் இருந்த பொழுதுகள் மீண்டும் மீண்டும் மனதில் நிழலாடுகின்றன. அதனால்தான் என் மெல்லிய தோள்கள் மெலிந்து காணப்படுகின்றன.

எனை வருத்துவது என் மனமே அன்றி என் தலைவன் அல்ல.

தெய்வத்தின் முன் சூளுரைத்துப் பின் மனைவி வருத்தமுறப் பிரியும் கொடியவனல்ல என் தலைவன்,

மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉம் என்ப யாவதும்
கொடியர் அல்லரெங் குன்றுகெழு நாடர்
பசைஇப் பசந்தன்று நுதலே
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் தோளே.
என்ற கபிலர்தம் வரிகளை நினைத்தவளாய்......

“கொடியவர் அல்லர் எம் குன்று கெழுநாடர்” என்று மூச்சிரைக்கப் பலமுறை கூறி முடித்தாள்.

பிரிவின் துயரில் தலைவி மனவருத்தம் தீர்த்துக் கொள்வதற்காகக் கூறுகின்றாள் என்பதை உணர்ந்த தோழி,

தலைவியே…. உன் மன உறுதியையும் அன்பின் மிகையையும் கண்டு மகிழ்வுற்றேன்.

பிரிவுத் துயர் தீரத் தலைவன் விரைவில் வருவான் என்று கூறி விடைபெற்றுச் சென்றாள்.

நாட்டு மக்களைக் காக்கும் பொறுப்பில் உள்ள என் கணவனின் பிரிதலுக்காக ஊடல் கொள்ளாமல், எனதன்பால் அவர் நலன் காப்பேன் என்று மனதில் உரமேற்றிக் கொண்ட தலைவி, மழலையின் வருகையினைத் தலைவனிடம் சொல்லி மகிழ்ந்திட, அவன் காவல் கடமையாற்றி வரும்வரை மலர்ந்த முகத்தோடு காத்திருந்தாள்.

நூல் - குறுந்தொகை

பாடல் எண் - 87

திணை - குறிஞ்சி

ஆசிரியர் - கபிலர்

கூற்று - தலைவி

(நோய் தொற்று, அபாய காலங்களில் தன் குடும்பங்களைத் தனித்துவிட்டுப் பணியாற்றிக் கொண்டிருக்கும் இராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறைப் பணியாளர்களுக்கு இக்கதை சமர்ப்பணம்)

பிரியாசந்திரன்.

நீங்கள் விரும்பும் கதைகள்

X
Please Wait ...