கிக்கீ

பெண்மையக் கதைகள்
4.8 out of 5 (6 ரேட்டிங்க்ஸ்)
இந்தக் கதையைப் பகிர

கடிகாரம் கூ கூ என்றது. இருட்டில் மணி தெரியவில்லை. எழுந்து விளக்கைப் போட சோம்பேறித்தனம். தலைமாட்டில் அலைபேசி இருந்தால்தான் தூக்கம் வரும் தலைமுறையல்ல அனிதா. நேரம் தெரிய வேணுமானால் எழுந்தே ஆகணும். கண்ணை இடுக்கிக் கொண்டு பார்த்ததில் இருள் பிரியத் தொடங்கி இருப்பது தெரிந்தது. இன்னும் கொஞ்சம் தூங்கலாமா என்ற ஆசையைப் போர்வையுடன் சேர்த்து உதறி விட்டு எழுந்து உட்கார்ந்து கொண்டாள். நேற்றைய தின பரபரப்பின் தாக்கம் மீதி இருந்தது. மனப் பேழையில் தேவையற்றதொரு சுமை . இறக்கி வைத்தால்தான் இன்றைய நாள் ஓடும். அதற்கு கொஞ்சம் தனியாக இருக்க வேண்டும். இந்த அதிகாலைப் பொழுதைத் தவிர அதற்கு ஏற்ற நேரம் கிடைக்காது. பல் துலக்கி , அரை லிட்டர் பால் மட்டும் காய்ச்சி , கொஞ்சம் ப்ரூ காபித் தூளைப் போட்டு மடக் மடக் என அரை டம்ளர் காபியைக் குடித்து விட்டு அறைக்குள் எட்டிப் பார்த்தாள். பாலா நிம்மதியாய் உறங்குவதை மெல்லிய குறட்டை சப்தம் உறுதி செய்ய அப்பாடா என்று இருந்தது. எப்படி எந்த பாதிப்பும் அன்றி இவனால் தூங்க முடிகிறது என்ற எண்ணம் கோபம் தந்தது. ஒரு சாவியை எடுத்துக் கொண்டு வீட்டைப் பூட்டிக் கொண்டு கீழே இறங்க யத்தனித்த போது ரெண்டு மாடி இறங்கி நடைப் பயிற்சி தேவையா என்று கால் கெஞ்சுவது போல ப்ரமை. ஆனால் யோசிக்க அதிகம் நேரம் இல்லை. இன்னும் அரை மணியில் குடியிருப்பு முழித்துக் கொள்ளும். இப்போதே யார் கண்ணிலாவது பட்டால் தொணதொணவெனப் பேசப் பிடித்துக் கொண்டு விட்டால் எப்படித் தப்புவதென மனம் அசை போட்டது. ஆமாம், நமக்கே மனசில் கனம் உள்ள போது யாருக்கோ பஞ்சாயத்து பண்ணப் பிடிக்குமா. மனதைக் குரங்கென்று தெரியாமலா சொன்னார்கள். நினைப்பது நடக்குமா நடக்காதா என்று அறியும் திறன் இல்லாவிட்டாலும் என்ன குதி குதிக்கிறது.

அவள் நினைத்தது நல்ல வேளையாய் நடக்கவில்லை. குடியிருப்பு இன்னும் உறக்கம் கலைந்து எழவில்லை. செக்யூரிட்டி கண்ணன் தவிர வேறு அரவம் இல்லை. அவரது வணக்கம் மேடமே அநாவசியத் தொல்லை போலத் தோன்றியது. தரைக்கு வலிக்குமோ என்பது போல மெதுவாக நடக்கத் தொடங்கினாள். முந்தைய நாள் நிகழ்வுகள் திரைப்படம் போல் மனதில் ஓடின. குரல் உயர்த்துவதில்லை என்ற தன் சபதம் எத்தனையாவது முறை நேற்று தோல்வியைத் தழுவிற்று எனக் கணக்குப் போட வெட்கம் தடை போட்டது. கோபம் வெற்றி இல்லை. தோல்வி. வருத்தம் வெற்றி இல்லை. தோல்வி. அமைதி வெற்றி. மகிழ்ச்சி வெற்றி.எப்படித் தோற்காமல் இருப்பது. இப்போதெல்லாம் பாலாவுடன் வாக்குவாதம் செய்யவே பொழுது புலர்கிறதோ என்ற நினைவு எட்டிப் பார்த்தது. அவள் செய்யும் எல்லாவற்றையும் இன்னும் நன்றாக செய்கிறேன் பேர்வழி என அவன் மாற்றிச் செய்வதும் தான் செய்வதே சரி என்ற அவன் தன் நிலை விளக்கங்களும் சலிப்பையே தந்தன. கல்யாணம் என்பது சில வருடங்களுக்குப் பிறகு நடக்கப் போகும் நித்திய போராட்டத்திற்குப் போடப் படும் முடிச்சா.? ஆயாசமாக இருந்தது. அதனால்கோபம். இதற்கா வந்தோம் என்ற வருத்தம். அவனும் இதே எண்ணம் கொண்டிருக்கலாம். ஆமாம், அவன் மனதில் உள்ளதை உட்கார்ந்து பேசி விடவா போகிறான். பேசி என்ன பயன். ஒரே கூரை கீழ் ஒரே மொழி பேசி வாழ்ந்தாலும் பரிதலில் ஏன் ப்ரச்சினைகள்.

யோசித்துக் கொண்டே நடந்த போது கிக்கீ பூனை ஒய்யாரமாய் தூரத்தில் உட்கார்ந்திருந்தது. அதுவும் ஏதோ யோசனையில் இருந்தது. முந்தைய நாள் நடப்பை யோசித்து கவலைப் பட அதற்குத் தெரியாது என்று மட்டும் சற்றே பொறாமையுடன் உணர்ந்தாள் அனிதா. கவலையும் எல்லாவற்றையும் ஊதி ஊதிப் பெரிதாக்குவதும் மனித இனத்தின் ஏகபோக சொத்து போல. பறவைகள் மேலே ஒலி எழுப்பிக் கொண்டு இரை தேடப் புறப்பட்டிருந்தன. அவற்றிற்கு மனம் என்ற ஒன்று இல்லை. அதனால் பாரம் இல்லை. நாமும் லேசாக இருந்தால் பறவை போலப் பறக்கலாம். கிக்கீ அசையாமல் உட்கார்ந்திருந்தது. அவளுக்கு அதைப் பார்ப்பது சுவாரசியமாய் இருக்கவே சற்று தள்ளி இருந்த ஒரு மேடையில் உட்கார்ந்து கொண்டாள்.

திடீரென கிக்கீயிடம் ஒரு துள்ளல் தெரிந்தது. “ஓ இதுதானா காரணம்! கறுப்பு பூனை வருவதைப் பார்த்த மகிழ்ச்சி. அது பூனை நடை போட்டு கிக்கீக்கு மிக அருகில் வந்தமர்ந்தது. இந்த கறுப்பு பூனைக்கு பயமே கிடையாது. அலட்சியமாய் நம்மைப் பார்க்கும். இரண்டும் ஒன்றை ஒன்று சற்று நேரம் பார்த்துக் கொண்டன. சன்னமாய் ஒலி எழுப்பின. பிறகு ஒன்றன் மீது ஒன்று தாவிக் கட்டிப் புரண்டன.அது சண்டையா கொஞ்சலா தெரியவில்லை. தான் இருந்த மனநிலையில் அது சண்டைதான் என அனிதா முடிவு செய்து கொண்டாள். ஒன்றுக்கொன்று என்ன சொந்தம், நேற்று அவற்றிற்குள்ளும் ஏதும் மனவேறுபாடா புரியவில்லை. இப்போது ஒரு குட்டிப் பூனையும் வந்து சேர்ந்து கொண்டது. அவர்கள் குடியிருப்பில் பூனைகள் அதிகம். அவைகள் அரச போகம் அனுபவித்தன எனலாம். என்ன,வாடகை தர வேண்டாம். காலை சிற்றுண்டி மதிய உணவு இரவு உணவு இலவசம். அசைவ உணவு தேவைப் பட்டால் எலிகள் தானாக வந்து அவற்றிடம் மாட்டும். இப்போது குரல் உயர்த்தி மூன்றும் ஏதோ பேசின. அமைதியாகின. சேர்ந்து அவ்விடம் விட்டு அகன்றன. அவற்றுக்கு ஏதும் ப்ரச்சனையா. தெரியாது. அது தீர்ந்ததா. தெரியாது. கிக்கீ தன்னை மற்ற இரண்டு பூனைகளுக்கும் புரிய வைக்க முயன்றதா. இல்லை. ஆனால் சக பூனைகளுடன் விரைவாய் கிக்கீ இயல்பாகி விட்டதே. தன்னால் பாலாவுடன் அவ்வளவு விரைவில் சுமுகமாக இயலவில்லை என்றிருந்தது அனிதாவிற்கு. அதனிடம் உள்ள எது அவளிடம் இல்லை? பூனை ஒரு அற்ப ப்ராணி. அவளிடம்தான் ஏதோ அதிகமாக இருக்க வேண்டும். மனிதப் பிறவி ஆயிற்றே!. ஆறாவது அறிவும், மனமும், கர்வமும், கவலையும் , தான் என்ற எண்ணமும், பலம் என அவள் எண்ணிக் கொண்டிருக்கும் பேச்சும்அதனிடம் இல்லை. எல்லாரிடமும் வாதம் செய்து வெற்றி பெறும் வேண்டாத வேலை அதற்கில்லை. மௌனம் மொழியை விட மேல். மௌனம் புரிந்து கொள்ளப் படும் இடங்களில் பேச்சு தேவை இல்லை. அனிதாவிற்கு ஏதோ புரிந்த மாதிரி இருந்தது. பாலாவுடன் கோபமாகப் பேசக் கூடாது என்று நினைத்துக் கொள்வாள். நீள வசனங்கள் அவனை எரிச்சலாக்குவதாக எண்ணிக் கொள்வாள். ஆனால் ஒரு முறை கூட முழு அமைதி காத்ததில்லை. இரைச்சல் பலம், அதுவே வெற்றி என்ற தப்பான பாடங்களை உலகம் எப்படியாவது நமக்குக் கற்றுக் கொடுத்து விடுகிறது.

சூரியன் மேலே எழும்பத் தொடங்கி இருந்தான். இயக்கம் ஆரம்பமாகி விட்டிருந்தது. காரைத் துடைக்க பாலா வருவது தெரிந்தது. அனிதாவின் வசவுகளையும் அறிவுரைகளையும் எத்தனை நேரம் கேட்கணுமோ என்று அவன் முகம் கவலை காட்டிற்று. அல்லது அவளுக்கு அவ்வாறு தோன்றிற்று.

“குட் மார்னிங் பாலா”

“குட்மார்னிங். நல்லா தூங்கினயா?”

“ம் தூங்கினேன். முழிப்பு வந்தது. வாக் பண்ண வந்துட்டேன்.”

நிமிர்ந்து பார்த்து புன்னகையுடன் அவனுடன் கூட நடக்க ஆரம்பித்தாள்.

அவனிடம் ஒரு பயம் கலந்த எதிர்பார்ப்பு இருந்தது. “எப்போது எப்படித் தொடங்கப் போகிறாளோ !”பேசி அனைத்தையும் புரிய வைத்து விடலாம் என்ற அவள் பிறவிக் குணம் எட்டிப் பார்த்தது. நிதானித்தாள். மூச்சை இழுத்து ஒரு முறை விட்டுக் கொண்டாள். பூனைகளின் மௌனமான வட்ட மேசை மாநாடை நினைத்துக் கொண்டாள்.மனத்தேரில் கிக்கீ க்ருஷ்ணன் போல தேரோட்டி இடத்தில் அமர்ந்து இருந்தது. அனிதா பார்த்தன் போல பய பக்தியுடன் அதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கிக்கீ பற்றியாவது பேச வேண்டுமோ என்ற ஆவல் தலை தூக்கிற்று. ஆனால் மௌனம் சுகம் என்று உணர்ந்து கொண்ட மனசுக்கு அந்த இரண்டு நிமிட மௌனம் கூட சுகமாக இருந்தது. எதுவும் பேசி அதைக் கெடுத்துக் கொள்ள மனம் ஒப்பவில்லை. அவனையும் அந்த அமைதியின் அதிர்வுகள் தொட்டிருக்க வேண்டும். அவன் கண்கள் அந்த எண்ணத்தைப் ப்ரதிபலித்தன. பொலபொலவென விடிந்த அந்த காலைப் பொழுது போல மனசும் ரம்யமாய் இருந்தது.

நீங்கள் விரும்பும் கதைகள்

X
Please Wait ...