அனைவருக்கும் வணக்கம், நான் உங்கள் ஈஸ்வரி.
என் அன்பான வாசகர்களுக்கு நன்றிகள் பல...
ஈஸ்வரியாகிய நான் கற்பனைவாதி, சிறு வயதில் இருந்தே கதைபடித்து, அந்தக்கதையில் மூழ்கிவிடும் ரகம் நான்.
ரமணி அம்மாவின் புத்தகங்கள் படித்து காதலின் மீது தீராத காதல் கொண்டேன். பகலிலும், உறங்கப் போவதற்கு முன்னும் என் மனதுக்குள் விதவிதமாய் கற்பனைக் குதிரைகள் ஓடும். ஆனால் அது தான் ஒரு எழுத்தாளரின் எண்ணம் என்று அன்று தெரியாது…
பள்ளி படிப்பு முடிந்து, கல்லூரியில் கால்வைத்தேன்.எனது கல்லூரி விடுதியில் நேரத்தை எப்படி போக்குவது என்று தெரியாமல் கதை சொல்ல ஆரம்பித்தேன். அப்படி ஒரு நாள்.
என் பக்கத்து அறைத்தோழிக்கு இரவில் ஒரு நாள் கதை சொல்லி கொண்டிருந்தேன். அப்போது விடுதி வார்டன் திட்டவும், முடிவைச் சொல்லாமல் உறங்கிவிட்டேன்.
கதை சொன்ன நான் உறங்கி விட்டேன். கதை கேட்டவள் முடிவு தெரியாமல் உறக்கம் வராமல் தவித்திருப்பாள் போலும். அதிகாலை மூன்று மணி அளவில் என்னை எழுப்பி, முடிவைச் சொல், அது தெரியாமல் எனக்கு உறக்கம் வரவில்லை என்றாள்.அது தான்
என் கற்பனைக்கு கிடைத்த முதல் அனுபவமும் அடித்தளமும்..
கொஞ்ச நாட்களுக்கு முன் பிரதிலிபியில் வாசகியாக நுழைந்த போது தான் "எழுத" என்று ஒரு வாசகம் பார்த்தேன். பிழைகள் இருந்தாலும் பரவாயில்லை எழுதுங்கள் என்ற வாசகம் என்னை ஊக்குவிக்க ,அதில் தொடங்கியது தான் என் எழுத்துப் பயணம்....
என் கதைகளை வாசித்து முடித்துவிட்டு, அமேசானில் உங்கள் கருத்துக்களை சொன்னால் எனக்கு கொஞ்சம் ஊக்கமளிக்கும்.
நன்றி,
அன்புடன்
ஈஸ்வரி