பெரியத்தேவர்

By CSC SENTHIL in Fantasy
| 4 min read | 5,505 वाचलं गेलेलं | लाइक: 1| Report this story

பெரியத்தேவர் - த. செந்தில் குமரன்

நொண்டியன் கட்டுத்தரை படலை திறக்கும் பொழுது எதோ வித்தியாசமாக உணர்ந்தான். மாடுகள் எல்லாம் நின்று கொண்டு இருந்தன. வழக்கமாக படலை திறக்கும் பொழுது தான் எல்லாம் எழுந்து நிற்கும். சிறுநீர் கழிக்கும். பிள்ளைகளை அழைக்கும். இன்று ஏனோ எல்லாம் மாறிப்போய் இருந்தது

ஆட்டு குட்டிகள் கவிழ்க்கும் குட்டி கூடு இடம் மாறி இருந்தது.

பெரிய அய்யா தவறிய பிறகு ஆட்டு வியாபாரத்தை நிறுத்தி விட்டார் ஆச்சி. குட்டிகள் கவிழ்க்க பயன்படும் குடில், புதிதாய் பிறக்கும் கன்று குட்டிகளை நரிகளிடமிருந்து இரண்டொரு நாள் காக்க பயன் பட்டு வருகிறது

பால் கறக்க அதிகாலையிலேயே ஆச்சி வந்து விடுவார். அவர் வருவதற்குள் கட்டுத்தரை பெருக்கி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி வைத்திருக்க வேண்டும். வந்தபின்பு தவிடு புண்ணாக்கு எடுத்து ஆச்சி தருவார் . அதை சின்ன மர தொட்டிகளில் கொட்டி நீர் கலந்து கறவை மாடுகளுக்கு முதலில் வைக்க வேண்டும்

நொண்டியா என்று குரல் கொடுத்த படி ஆச்சி வருகிறார் ஆச்சி குரல் கேட்டவுடன் கன்றுகள் கத்தி தவித்தன. பால் மாடுகளுக்கு முதலில் தண்ணீர் காட்ட துவங்கினான் நொண்டியன்

ஆச்சி ஏனோ நகர்ந்திருக்கும் குட்டி கூட்டை பார்த்து கொண்டே நிற்கிறார் “நொண்டியா இத தூக்கு”

குட்டிக்கூடு வட்ட வடிவில் இருக்கும். நொச்சி குச்சிகளை வளைத்து, பனை நார் கொண்டு கட்டப்பட்டிருக்கும். பனை ஓலை மேற்புறத்தில் வேயப் பட்டிருக்கும். மூன்று ஆட்டை நிறுத்தி வைக்கும் உயரத்துடனும், ஒரு ஆள் கால் மடக்கி படுத்து கொள்ளும் அளவிலும் கட்ட பட்டிருக்கும்

பெரும் புயல் காற்று கூட புரட்டி போட முடியாத அறிவியல் அற்புதமாய் இன்னமும் கிராமங்களில் குட்டி கூடு நிற்கிறது

குட்டி கூடு பெரியதில்லை என்றாலும் ஒருவராக நகர்த்துவது சிரமம். பெரிய ஆச்சியும் ஒரு கை பிடிக்க கூட்டை தூக்கி திறக்கிறான் நொண்டியன்

ஐயோ என்கிற ஒரு குரல் ஆச்சியிடம் வெளிப்பட்டது.

நொண்டியன் வெலவெலத்து நிற்கிறான்.

குறி சொல்லும் குறத்தி அங்கே புழுதி போர்த்தி கிடக்கிறாள்

உடம்பில் பொட்டு துணி இல்லை. கிழித்தெறிந்த துணியால் அவள் கை பின்புறம் வைத்து கட்டபட்டிருக்கிறது வாயில் வேறு துணி திணிக்க பட்டிருக்கிறது.

ஒரு காலை மடித்து, ஒரு கால் திருக்கி கிடக்க, முலைகள் வானம் பார்த்து கிடக்க, கைகள் விரித்து, கண்கள் மணல் மூடி மிகுந்த துயரத்தில் வலியில் அவள் செத்து போயிருந்தாள்.

ஆச்சி அப்படியே கிழே சாய்ந்து விட்டார். நெஞ்சை பிடித்து கொண்டு நொண்டியனும் கிழே சாய்ந்துவிட்டான்.

குறத்தியின் மரணத்தையும் மீறி அவளின் நிர்வாணம் இருவரையையும் பயம் கொள்ள செய்தது.

ச்சி ரெண்டாம் தாரமாய் வாக்கப்பட்டு வந்தபோது நொண்டியன் சிறுபிள்ளை. அப்பனோடு ஆடு மாடுகள் பேணிக்கொண்டு இந்த வீட்டிலேயே கிடப்பான். முதல் தாரத்து பிள்ளை பெரியத்தேவர் வீட்டுக்கு அடங்காதவராக இருந்தார். அம்மா இல்லாத பிள்ளை என அய்யா கொடுத்த செல்லம் முழு தருதலையாய் நின்றது. முழு நேர குடி, அடிதடி என உறவுகளுக்கு மிக பெரிய அச்சுறுத்தலாய் நின்றது

"ஏண்டா நொண்டியா?.. இது நடுத்தேவர் வேலையா இருக்குமா ?"

நடுத்தேவர் கோவக்கார்தான். பால் கொடுக்காத பசுமாட்டை அடித்து மடிய வைப்பார். கொல்லை மேய்ந்த பங்காளி வீட்டு சிறு ஆட்டின் அடி வயிற்றில் குத்து வாளால் வெட்டியவர்.

அவர் மனைவி ராட்சசி. நடுத்தேவர் ஆசை பட்டார் என்பதற்காக தூக்கி வரப்பட்டவர். தேவர் பெட்டி பாம்பாய்தான் அவள் முன்பு இருக்கிறார்

இது சின்னவர் வேலை. விடலை பையன். அம்மாவின் செல்லம். வீட்டு வரவு செலவு அவரிடம். இன்னமும் திருமண ஆகவில்லை. பெண்கள் குளிக்கும் குளத்து மேட்டில் பலநாள் நிற்பார். குறத்தி பின்பு திரிவதையும் நொண்டியன் பார்த்திருக்கிறான்.

குறத்தி வசீகரமானவள். எந்த ஊர் என்று யாருக்கும் தெரியாது குறி சொல்லி ஊர் ஊராய் வருவாள். சிறு சிறு வைத்தியமும் தெரியும். நீண்ட தூர நடையால் உடல் வலுவாய் உயரமாய் இருப்பாள். அவளது நெற்றி அகல பொட்டில் ஊர் குடியானவர்கள் கிறங்கி கிடப்பார்கள்

ஆச்சி பனம்பாய் ஒன்றை எடுத்து வருகிறாள். அதில் இருவருமாய் சேர்ந்து குறத்தியை சுருட்டி மறைக்கிறார்கள். பின்பு இருவரும் சேர்ந்து தூக்கி சுமக்கிறார்கள்

வயல் வெளிகள் கடந்து கருவேல மரங்கள் அடர்ந்த தரிக்காயம் வருகிறார்கள். இந்த இடம் முழுவதும் ஆச்சிக்கு சொந்தமான இடம். மனித நடமாட்டம் இருக்காது. பொழுதும் இன்னமும் விடிய வில்லை

கரி மூட்டம் போடுவதற்காக கருவேல மரத்தின் கட்டைகள் அங்கு குவியலாக இருக்கிறது. அடுக்கி வைத்திருக்கும் விறகுகளால் குறத்தியை இருவரும் மறைக்கிறார்கள். வைக்கோல் பரப்பி விறகு குவியலை மூடுகிறார்கள்.

களிமண் கொண்டு மெழுகி மூட்டம் தயார் ஆகிறது பனை மட்டையில் தீவைத்து ஆச்சி எடுத்து வருகிறாள். காய்ந்த விறகுகள் எளிதில் தீப்பிடித்து குறத்தி எரிய ஆரமிக்கிறாள்

வீட்டில் சின்னவர் இல்லை. நடுத் தேவரை கூப்பிட்டு ஆச்சி விடயத்தை சொன்னதும் வானத்திற்கும் பூமிக்கும் குதியாய் குதிக்கிறார் அவர்.

மாமன் களை அழைக்க விரைகிறார் அவர். மாமன் கள் வந்தவுடன் கூடி ரகசியாமய் எதோ பேசிக்கொள்கிறார்கள்.

ச்சி கல்யாணம் கட்டி இங்கே வந்தபோது இரண்டு தம்பிகளையயும் கூட கொண்டு வந்தார். வீட்டு வேளையில் விவசாய வேளையில் அவர்கள் துணையாய் இருந்தார்கள்.

சிறு பிள்ளையில் நொண்டியனையும் தாண்டி செல்லும் போதெல்லாம் எட்டி உதைப்பார்கள். தண்ணீரை முகத்தில் கொட்டுவார்கள். அது குடி போதையில் இப்போதும் தொடர்கிறது

கரி மூட்டத்தில் விறகோடு விறகாக குறத்தி எரிந்து அழிந்து போயிருந்தாலும், எங்காவது இந்த விடயம் புகைந்து விடுமோ என பயந்தார்கள் அவர்கள். திருமணம் ஆகாத பிள்ளையை ஜெயிலுக்கு அனுப்ப ஆச்சிக்கு சம்மதம் இல்லை

பெரியத்தேவரை பலி ஆடாய் மாட்டிவிட அவர்கள் முடிவெடுத்தார்கள்

மாமன்கள் பெரியத்தேவரிடம் இதமாய் எடுத்து சொல்லுகிறார்கள். நான்கு ஐந்து மாதங்கள் கழித்து, தென்னாடார் நிலத்தை விற்று ஜாமின் பெற்று தருவதாக உறுதி அளிக்கிறார்கள்

பெண்பிள்ளை விடயத்தில் குற்ற வாளியாய் நிற்க பெரியத்தேவருக்கு துளியும் விருப்பம் இல்லை. அவரின் மனைவியும் கதறி அழுது துடித்தாள்

அவரின் மனைவியின் அழுகை கேட்டு பங்காளிகள் கூட ஆரமிக்கிறார்கள். கூட்டம் கூடி விட்டது.

ஒரே ஒரு பிள்ளை பெரியத்தேவருக்கு இருந்தது. ஒருநாள் அது பொது கிணற்றில் செத்து மிதந்தது. அதிலிருந்து அந்த ஆச்சி பித்து பிடித்தது போலவே இருந்தார்.

பிள்ளை பறிபோன அன்றுதான் கடைசியாக பெரியத்தேவர் அழுதார். என் புள்ள செத்தது மாதிரியே நடுத்தேவன்புள்ளைய ஒருநாள் நானும் மிதக்க விடுவேன் பார் என சபதமும் எடுத்தார்

ஒருத்தருக்கு ஒருவர் பேச்சு வார்த்தை அன்றிலிருந்து நின்றே விட்டது

எல்லாவற்றின் சாட்சியாக நொண்டியன் இருந்து கொண்டு இருக்கிறான். தண்டனை கொடுத்துவிட அவன் ஒன்றும் கடவுள் இல்லையே. குற்றவாளிகளுடனேயே அவன் தொடர்ந்து வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான்

குறத்தி விடயம் மெல்ல கசிந்து காவல் துறைக்கு போய்விட்டது. தடயம் இல்லாவிட்டாலும் விசாரிக்க சொல்லி உததரவு வந்தது

ஊர் தலையாரி முதல் அனைவருமே பெரியத்தேவர் செய்திருக்க வாய்ப்பிருக்கிறது என சாட்சி சொன்னார்கள்` மாமன்கள் மகத்தான திட்டம் அதன் பின்னே இருந்தது .

காவலர்கள் வீட்டுக்கு விசாரணைக்கு வந்தபோது பெரியத்தேவர் பங்காளி வீட்டு ஆட்டில் பால் பீச்சிக்கொண்டு இருந்தார். திருட்டு பால்.

பின்பக்கமாய் போன காவல் காரன் அவர் கழுத்தை பிடித்து விட தேவருக்கு கோவம் வந்தது. உட்கார்ந்த நிலையிலேயே காவல்காரனை முன்பக்கமாய் இழுத்து தூக்கி வீசினார்.

அலறிய படியே காவலன் முற்றத்தில் இருக்கும் நிறச்சல் மீது விழுந்தான். வைத்து கட்டி இருந்த பனம் கருக்கு நன்றாக அவனை பதம் பார்த்தது. எட்டி அவன் வாயிலேயே மீண்டும் மீண்டும் மிதித்தார் பெரியத்தேவர்.

அடியும் உதையும் தாங்காமல் ஓடினான் காவல் காரன்.

அன்று இரவே பெரும் படையாய் காவல் துறை வந்து ஊருக்குள் இறங்கி விட்டது. வீடு வீடாய் தேட துவங்கினார்கள். ஆனால் பெரியத்தேவரை மட்டும் கண்டு பிடிக்க முடிய வில்லை

எங்கே போனார் என்ன ஆனார் என்று யாருக்கும் தெரிய வில்லை. காவல் துறை ஊரிலேயே தங்கி விட்டது.

திண்ணைகள் வைத்து கட்டிய பெரிய வீட்டில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். வீடு இரண்டு அடுக்காய் இருக்கும். வெளியிலிருந்து பார்த்தால் தெரியாத மாதிரி நடு வீட்டில் ஒரு மச்சு இருக்கும்

அதில் பழைய சாமான்கள் மர பலகைகள் போட்டு வைத்திருப்பார்கள்

வேட்டையில் கிடைக்கும் மான் கொம்புகள் கூட அந்த மச்சியில்தான் மறைந்திருக்கும்.

அங்கிருந்து பார்த்தால் ஊரின் பாதி நடமாட்டம் தெரிந்து விடும்.

எதிர்பார்த்தபடியே சின்னவர் வீட்டுக்கு திரும்பிவிட்டார். எவரின் சந்தேக பார்வையும் அவர் மீது திரும்பவில்லை. காவலர்கள் வீட்டுக்கு வந்து மிரட்டிவிட்டு போனார்கள்

நாளைக்குள் பெரியவர் சரணடைய வில்லை என்றால் நொண்டியன் உட்பட அனைவரையும் தூக்கி செல்வோம் என பயமுறுத்தி சென்றார்கள்.

பெரியத்தேவர் ஒளிந்திருக்கும் இடம் தெரியாமல் மாமன்கள் அல்லாடினார்கள்

அவர் அகப்பட கூடாதென நொண்டியன் வேண்டாத தெய்வம் இல்லை.

ச்சி வெய்யில் எரிந்து கொண்டிருந்தது. வீட்டு புழக்கடை பக்கம் இருக்கும் கிணற்றில் எதோ விழும் சத்தம் கேட்டு பின்பக்கம் ஓடினான் நொண்டியன். கிணற்றுக்குள் நடுத்தேவர் பிள்ளை மூழ்கி கொண்டு இருந்தான்

பின்கட்டு வழியே யாரோ ஓடி போவது தெரிந்தது. நொண்டியனுக்கு அது சின்னவர் போல தெரிந்தது. ஐயோ என்று நொண்டியன் அலறி துடித்தான். அவன் அலறல் கேட்டு வீட்டு பெண்கள் ஓடி வந்தனர்

காவல் துறைக்கு பயந்து ஆண்கள் வீட்டில் இருப்பதில்லை. பெண்களும், ஆண் துணை என நொண்டியனும் மட்டுமே அங்கிருந்தனர்.

உதவிக்கு பக்கத்து தெருவில் இருக்கும் காவலரை அழைக்க பெரிய ஆச்சி ஓடினாள்.

கிணற்றிலிருந்து தூக்க ஆளில்லாமல் பிள்ளை முழுவதுமாக மூழ்கிப் போயிருந்தான்

அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. மச்சிலிருந்து மேல்நோக்கி ஓட்டைப் பிரித்து கொண்டு பெரியத்தேவர் வெளிப்பட்டார் . ஓடுகள் பிரிந்து சரிய, கருப்புசாமி மாதிரி இறங்கி வந்தார்

“வராதீங்க... போலீஸ் இருக்கு” என்று பெரியத்தேவரின் மனைவி பெரிதாய் கத்தி கதறியும் துள்ளி குதித்து ஓடி வந்தார். கிணற்றில் பாய்ந்தார். பிள்ளையை நெஞ்சோடு அணைத்து மேலேறி வந்தார்

அவரிடம் இருந்து குழந்தையை வாங்கி கொண்டு பெண்கள் ஓடினார்கள் .

நின்று கொண்டிருக்கும் மாட்டு வண்டியை பெரியத்தேவர் அப்படியே ஒரு பக்கமாய் சாய்த்து விட, பெண்கள் சக்கரத்தின் மீது குழந்தையை குப்புற வைத்தார்கள்.

சக்கரத்தை வேகமாக சுற்றி விட, சக்கரத்தின் மீதுள்ள குழந்தை குடித்த கிணற்று நீரை கக்க ஆரமித்தான்.

அவன் வாயிலிருந்தும், மூக்கு வழியாகவும் நீர் வெளியேற தொடங்கியது. கண்கள் உள்ளே சொருகி சொருகி மீண்டது.. ஆழமாக இழுத்து மூச்சு விட்டு குழந்தை அழ ஆரமித்தான்.

தூரத்தே காவலர்கள் ஓடி வருகிறார்கள்.

"ஏன் இப்படி பண்ண ?”

“நம்ம புள்ளைய துடிக்க துடிக்க சாக அடிச்சானுகளே! அவனுக புள்ளைய காப்பாத்த நீ ஏன் இறங்கி வந்தே” என பெரியத்தேவரின் மனைவி கதறி துடிக்கிறாள்.

"ஏண்டி முண்ட அப்படி சொல்லுறே..., அதுவும் ஒரு உசிரு தானே" என்கிறார் பெரியத்தேவர்

அவரின் கண்களில் நீர் பொங்கி வழிந்து கொண்டு இருந்தது. அவர் எழுந்து ஓட முடியாத மன நிலையில் இருந்தார்

புழுதி காற்று ஒன்று வெப்பத்துடன் வேகமாய் ஊரை சூழ்ந்து கொண்டது

*********************************

My addrerss:

த. செந்தில் குமரன்

68 கடிநெல்வயல் அஞ்சல்

வேதாரணியம் வட்டம்

நாகப்பட்டினம் மாவட்டம்

Mobile : 8754012231

Email : dhanasamysenthil@yahoo.com

X
Please Wait ...